Skip to main content

4. அதிருநட புரியுமிரு

சந்தம்

தனதனன தனதனன தனதனன தனதனன
    தனதனன தனதனன ...... தனதான

பாடல்

அதிருநட புரியுமிரு பரமனடி பரவிவளர்
பருத்தவட ரண்டமெனும் ...... பொருளாகி

அண்டவுறை பண்டமென பண்ணுபவ னொளிபொருதி
ஐந்துமொரு அறிவுடைய ...... உயிராகி

கதியுமற வினையுமுற பிணியுமுற குறையுமிகு
களியனெனை கடைவிழியே ...... காண்பாயே

கருப்பொருளு முருகனென கருதிதின வெழுதிமுறை
பருத்தவுடல் மெலியவருள் ...... தருவாயே

பருமன்கெட பிறவும்விட பரவுமொளி பெருகிவர
உருவுத்தரு அல்லலறு ...... முருகோனே

பரங்கிரியில் பதியுமென பிறைதரித்த பிழம்புதரு
பிறவிபரி அயிலைவிடு ...... பெருமாளே

சொல் விளக்கம்

அதிரும் நடம் புரியும் இரு பரமனடி பரவிவளர் ...... அண்டத்திற்கு வெளியே ஆடும் பரமன் இருக்கால் அதிர்வு பரவி வளர்ந்து

பருத்த அடர் அண்டமெனும் பொருளாகி ...... பருப்பொருளாக அடர்ந்து அண்டமென ஆகிற்று

அண்டம் உறை பண்டமென பண்ணுபவ னொளிபொருந்தி ...... அந்த அண்டத்திள் ஒரு பண்டமாக இருக்கும் பருப்பொருள் ஆண்டவன் ஒளிபொருந்தி

ஐந்துமொரு அறிவுமுடை உயிராகி ...... ஆறறிவு பெற்ற உயிராகியது

கதியுமற வினையுமுற பிணியுமுற குறையுமிகு ...... அவ்வுயிராகிய நான் வினை ஏறி, பிணியுற்று கதியற்று குறைநிறைந்து

களியனெனை கடைவிழியே காண்பாயே ...... குடியும்பெற்று தவிக்கும் என்னை கடைவிழியால் ஒரு பார்வை பார்பாயே

கருப்பொருளு முருகனென கருதிதின வெழுதிமுறை ...... முருகனை கருப்பொருளாக கொண்டு தினமும் பாடல் எழுதி

பருத்தவுடல் மெலிய அருள் தருவாயே ...... இந்த உடல் மெலிய அருள் தர வேண்டும்

பருமன் கெட பிறவும் விட பரவுமொளி பெருகிவர ...... உடலும் அதனோடு பிறவும் கெட ஒளி ஏறி

உருவுதரு அல்லலறு முருகோனே ...... இந்த மானிட உருவம்தரும் தொல்லை அறுக்கும் முருகோனே

பரங்கிரியில் பதியுமென பிறைதரித்த பிழம்புதரு ...... திருப்பரங்குன்றத்தில் தேவயானியை மணந்து அவள் பதியாகிய, பிறை சூடிய பரமன் தரும்

பிறவிபரி அயிலைவிடு பெருமாளே ...... இக்கொடிய பிறவி பொடிபட வேலை விடும் முருக பெருமாளே